அசூசா வீதி கொண்டாட்டம் AZUSA JUBILEE Los Angeles California U.S.A. 56-09-16 1. மிக்க நன்றி, உங்களுக்கு மிகவும், அன்பார்ந்த நன்றி, இந்த அசூசா வீதியில் பரிசுத்த ஆவி வெளியரங்கமாய் ஊற்றப்பட்டதின் கொண்டாட்டத்தில், இந்த மத்தியான வேளையில், இந்த அற்புதமான தூதரின் ஆலயத்தில் இருப்பது, நிச்சயமாகவே சிலாக்கியமாய் இருக்கிறது. பாருங்கள், ஒருவிசை பரிசுத்தவான்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட விசுவாசத்திற்காக, இன்னமும் போராடுவதற்கென்று அநேக மக்கள், இங்கே கூடி வந்திருக்கிறார்கள். வருகிறதான இந்த வாரத்தின் மகத்தான நேரத்தில், அபிஷேகிக்கப்பட்ட அனேக பிரசங்கிமார்கள் பேசப் போகிறதையும், தேவன் தாமே அபரிவிதமாய் நமக்குச் செய்யப் போகிற காரியங்களையும், ஒவ்வொரு கூட்டத்திலும், அவருடைய பிரசன்னம் நம்முடனே கூட இருக்கப் போகிறதையும் குறித்து, நாம் மிகவும் நம்பிக்கை கொண்டிருக்கின்றோம். மேலும், இந்த கூடுகையிலிருந்து ஒரு பண்டையகால பெந்தெகொஸ்தே கூட்டமாய் தொடர்ந்து சென்று, அது நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் வருகைக்கு முன்னதாக, அப்படியே இந்த உலகத்தை, துப்புரவாக்கி கொண்டு போகப் போகிறதென்று நாம் நம்புகிறோம். 2. மேலும் இப்பொழுது, இங்கு வெப்பமாக இருக்கிறது என்பதை நான் அறிவேன். நாம் நேராக வார்த்தைக்கு சென்று பரிசுத்த லூக்காவின் புத்தகத்திலிருந்து 4-ம் அதிகாரம், 16-ம் வசனம் துவங்கி, நான் அதை வாசிக்கிறேன். தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத்தின் படியே ஒய்வு நாளில் ஜெப ஆலயத்திலே பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார். அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புத்தகத்தை விரித்தபோது: கர்த்தருடைய ஆவியானவர் என் மேலிருக்கிறார்; தரித்திரருக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம் பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொருங்குண்டவர்களை விடுதலையாக்கவும், கர்த்தர் தாமே வாசிக்கப்பட்ட இந்த அவருடைய வார்த்தையின் மேல் தம்முடைய ஆசீர்வாதங்களைக் கூட்டுவாராக. 3. அனேக வருடங்களுக்கு முன்பாக, ஸ்பெயின் நாட்டவர் மேற்கு கரையில் மேலும் கீழுமாக கப்பல் பிரயாணம் மேற்கொண்டு, இந்த பெரிய இடத்தைக் கண்டு பிடித்தனர் என்பதை அறிந்தவர்களாய், இன்று, இந்த லாஸ் ஏஞ்சல்ஸில் இருப்பது, எப்பேற்பட்ட சிலாக்கியமாய் உள்ளது, இந்த பெரிய பட்டணமானது, ஏதோ ஒரு நாளில் எப்படியாக இருக்கப் போகிறது என்பதைக் குறித்து, அவர்கள் சிறிதளவே அறிந்திருந்தார்கள். ஐம்பது வருடங்களுக்கு முன்பாக, அசூசா வீதியில் நடந்த பரிசுத்தாவியின் மகத்தான வெளியரங்கமான ஊற்றப்பட்டதின் கொண்டாட்டத்தில், இன்று இந்த தூதருடைய ஆலயத்தில் இருப்பதென்பது, முழு சுவிசேஷ விசுவாசத்தின் ஒரு தனிசிறப்பு வாய்ந்த ஞாபகார்த்தமாய் இருக்கிறது. நான் செய்தித்தாளை நோக்கிக் கொண்டிருந்தேன். மேலும் அதில் இந்த பழைய அசூசா வீதி பணிக்குழுவின் (mission) படத்தைப் பார்த்தேன். அதற்கு சற்று கீழே, இந்த அழகான தூதருடைய ஆலயத்தின் படமும் இருந்தது. அது அந்த பழைய நியமனத்திலிருந்து, சபையானது இந்த நாளில் இந்த இடத்திற்கு, நீண்ட காலங்களை கடந்து எப்படியாய் வந்தது என்பதை காட்டுகிறது 4. இந்த பேரணியை நடத்துவதற்கு, இந்த சங்கத்தினர் ஒரு அருமையான இடத்தை தெரிந்து கொண்டிருக்கிறார்கள், என்று நான் நினைக்கிறேன், ஏனெனில் இந்த ஆலயமானது இன்று, இயேசு கிறிஸ்து இன்னமும் ஜீவித்து ஆளுகை செய்கிறார் என்று, தன் உள்ளத்தின் ஆழத்தில் உணர்வு கொண்டிருந்த, திருமதி மெக்பர்சன் (Mrs. McPherson) என்ற சிறிய தாயின் ஞாபகார்த்தமாக நின்றுக் கொண்டிருக்கிறது. அவள் பாரஸ்ட் லானில் (Forest Lawn) இன்று உறங்கிக் கொண்டிருக்கிறாள், அது அவளுடைய சரீரம். ஆனால் அவளுடைய தீரமுள்ள ஆத்துமா, தேவனிடம் இளைப்பாறிக் கொண்டிருக்கிறது. அவள் கடந்து போனதினால் விட்டுச் சென்றது, காலமென்னும் மணலின் அடிச்சுவடுகளாய் உள்ளது. இந்த ஆலயத்தில் இங்கு இருப்பதற்காக, சகோ. மெக்ஃபெர்சன் (McPherson), அவருடைய மகன், மற்றும் சகோதரர் டீஃபெர்ட் (Teefert), மற்றும் உள்ள அனேக ஊழியர்கள், மற்றும் வேலையாட்கள், இந்த மகத்தான கூட்டத்தின் உறுப்பினர்கள், மற்றும் மற்ற எல்லா நாடுகளின் பாகங்களிலிருந்தும் இந்த மகத்தான பேரணியின் நிமித்தமாய் கூடியிருக்கிற யாவருக்கும், நான் இந்த இரண்டு இரவுகளில் அல்லது இரண்டு ஆராதனை சமயங்களில், உங்களிடம் பேச வாய்ப்பை பெற்றிருப்பதற்காக, உங்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். ஆம்! மற்றொரு வெளியரங்கமான ஊற்றப்படுதலுக்காக, தேவனை விசுவாசிப்பதிலும், நம்புவதிலும், நம் எல்லோருடைய இருதயமும் ஜெபத்திலே ஒருங்கிணைய வேண்டுமென்று, நாங்கள் விரும்புகிறோம். தேவன் அப்படியே மாறாதவராயிருக்கிறார். அவர் ஒருபோதும் தவறுவதில்லை. மேலும் இது உண்மையாக ஒரு அசூசா வீதியின் கொண்டாட்டம் இல்லை. இயேசு யூபிலியின் அனுக்கிரக வருஷத்தை பிரசங்கித்தபோது, பெந்தேகொஸ்தேயில் அது கீழே கொண்டு வரப்பட்டு அப்போதிலிருந்து, அது இருக்கிறது. 1900 வருடங்களுக்கு முன்னால், பெந்தேகொஸ்தேயில் துவங்கின அந்த மகத்தான யூபிலியை, நாம் தொடர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். 5. பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை பெற்று, இன்று நீங்கள் யாவரும் நின்று கொண்டிருக்கிற, விலையேறப்பெற்ற விசுவாசத்தில், உங்களைப் போல, உங்களுடன் நானும் ஒரு ஆராதனைக்காரனாய் இருப்பதற்காக, நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். காலம் கடந்த ஒருவனாய் உணர்கிறேன், ஏனெனில், நான் பிறப்பதற்கு முன்பிருந்தே, சுவிசேஷத்தை பிரசங்கித்துக் கொண்டிருந்த அனேகர், இங்கு இருக்கிறார்கள். இந்த மகத்தான வெளியரங்கமான ஊற்றுதலானது, 1906-ஆம் வருடத்தில் கலிபோர்னியாவுக்கு வந்தது என்று நான் நம்புகிறேன். அது நான் பிறப்பதற்கு சில வருடங்களுக்கு முன்னானது. அந்த நேரத்தில் தொழுதுகொண்ட அனேக விசுவாச வீரர்கள், இன்று வயது சென்றவர்களாய், தலைமயிர் நரைத்த மக்கள், அதை நினைவு கூர்ந்தவர்களாய், இங்கே அமர்ந்து இருக்கிறார்கள். ஆனால் நான் உங்களுக்கு சொல்லுகிறேன், என்னுடைய சகோதரர்களே, நாம் அக்கரைக்கு கடந்து போகிறதான ஏதோ ஒரு நாளில், ஒரு மகத்தான வெகுமதி உங்களுக்கு அங்கு வைக்கப்பட்டிருக்கிறது. நான் அந்த மக்களிடம் பேசினபோது, இந்த பெரிய சபையானது இவ்வளவு செழிப்பாக மேலே எழும்பி வருவதற்காக, அவர்கள் எவ்வளவாய் காலதாமதமாக படுத்து உறங்கி, தண்டவாளங்களின் ஊடாக நடந்து, சோளங்களை பொருக்கி, அதை தங்களுடைய பிள்ளைகளுக்காக உடைத்து, கடினமாக ஜீவித்து, இந்த எல்லா வருடங்களின் ஊடாக, அதற்காக, எவ்வளவாய் கிரயத்தை செலுத்தும்படி செய்தது, என்பதை பார்க்க முடிகிறது. ஏதோ ஒரு மகிமையின் நாளிலே, காலங்களின் ஊடாக மீட்கப்பட்ட யாவரும், இந்த பூமியின் விளிம்பில் நின்று கொண்டு, மீட்பின் கதையை பாடிக் கொண்டிருக்கும் போது, நாம் என்ன பேசுகிறோம் என்பதை கூட அறியாதவர்களாய், தூதர்கள் தலைகுனிந்து, இந்த பூமியை சுற்றி நின்று கொண்டிருக்கும், மற்றொரு மகத்தான யூபிலியை நான் சந்திப்பேன் என்று நம்புகிறேன். தூதர்களுக்கு ஒருபோதும் மீட்பு தேவைப்படவில்லை, ஆனால் பரிதபிக்கப்பட்ட தொலைந்துபோன பாவிகளாகிய நாம், அவருடைய கிருபையினால் மீட்கப்பட்டதால், மீட்பின் கதையை பாடுவது என்னவென்றும், பாடலின் அர்த்தம் என்னவென்றும், நாம் அறிவோம். நாம் அவரை ராஜாதி ராஜாவாகவும், கர்த்தாதி கர்த்தராகவும், அவருக்கு முடி சூட்டும் போது, அது என்னே, ஒரு மகத்தான தருணமாய் இருக்கப் போகிறது. 6. மேலும், இன்று என்னுடைய வேத வாசிப்பு, கிறிஸ்து தேவாலயத்தில் பிரவேசித்து, அனுக்கிரக வருஷத்தை பிரசித்தப்படுத்த வந்தேன், என்று அவர் சொன்னதிலிருந்து வருகிறது. கர்த்தருடைய அபிஷேகம் அவர் மேல் இருந்தது. அவர் புத்தகத்தை வாசித்து உட்காந்தார். விலையேறப் பெற்ற வார்த்தை, அவருடைய உதடுகளிலிருந்து புறப்பட்டது என்று அது கூறுகிறது. பழைய ஏற்பாட்டின் காலத்தில் யூபிலி வருடம் என்றழைக்கப்பட்ட ஒரு வருடம் இருந்தது. அது அனைத்து சிறைப்பட்டவர்களை விடுவிக்கிறதான ஒரு வருடமாயிருந்தது. அடிமையாய் இருக்கிற ஒவ்வொருவனும் சுதந்திரமாய் போகலாம். அது இந்த நாளுக்கு மகத்தான அர்த்தமுடையதாய், ஒரு அடையாளமாக அங்கு நின்றது. இப்பொழுது, இன்று அது ஒருகால்... இல்லாமல்... (ஒலிநாடாவில் காலியிடம்)... நான் என்றென்றைக்கும் இந்த எஜமானனுக்கு வேலை செய்யும்படி, ஒரு கூர்மையான ஊசியை எடுத்து, காதில் துளையிட்டு குறிக்கிற அடையாளமாய் அது இருக்கிறது. அது இன்றைக்கு எவ்வளவு ஒத்ததாய் இருக்கிறது. மேலும் ஐம்பது வருடங்களுக்கு முன் முதலாவதாக பரிசுத்த ஆவியானவர் இங்கே ஊற்றப்பட்டபோது, அது ஒரு மாட்டு தொழுவம் என்று எனக்கு கற்பிக்கப்பட்டது. அந்த காரியம் எவ்வளவு ஒத்ததாயிருக்கிறது. இயேசு முதலாவது மாம்ச ரூபத்தில் இந்த பூமிக்கு வந்த போது, தேவன், அவர் ஒரு தொழுவத்தில் பிறந்தார். மேலும் இந்த லாஸ் ஏஞ்சல்ஸில் அவர் வந்த போதும், அவர் இன்னுமாக ஒரு தொழுவத்தில் தான் வந்தார். அது உங்களை தாழ்மைப்படுத்தத் தக்கதாக நம்மை பாவங்களிலிருந்து மீட்கும்படிக்கான, தேவனுடைய தாழ்மையாய் இருக்கிறது. 7. பிறகு விடுதலையாகி போக விரும்பாத அந்த நபர், முத்திரையிடப்படுவான் என்பது இன்று அதிகமாக தர்க்கிக்கப்படுகிற காரியமாகிய தேவனுடைய முத்திரை, அல்லது மிருகத்தின் முத்திரை என்பதற்கு அது ஒரு அழகான அடையாளமாய் இருக்கிறது. "இப்பொழுது விசுவாசம் கேள்வியினாலே, தேவனுடைய வார்த்தையை கேட்பதினாலே வருகிறது" மேலும், நாம் விடுதலையானோம் என்பதை கேட்டும், நம்முடைய விடுதலையின் பேரின் செயல்பட மறுக்கும்போது, நாம் முத்திரையிடப்படுவோம். என்னுடைய கருத்தின்படி, தேவனுக்கு புறம்பே முத்திரையிடப்படுதல், மிருகத்தின் முத்திரையை பெறுவதாய் இருக்கிறது. செவிகொடுப்பதே பெற்றுக் கொள்வதாய் இருக்கிறது. மேலும், நாம் விடுதலையானோம் என்பதைக் கேட்கும்போது, அதை நாம் ஏற்றுக் கொண்டு விடுதலையாய் இருக்கக் கடவோம். இப்பொழுது ஒருவன் யூபிலி சத்தத்தைக் கேட்கும்போது, அவன் விடுலையாகி போக விரும்பவில்லையெனில், அப்பொழுது, அவன் முத்தரிக்கப்பட வேண்டும். இன்றைக்கு கூட இந்த ஆச்சரியமான, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தையும், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தையும் குறித்து கேள்விப்படும் புருஷரும், ஸ்திரிகளுமாகிய நீங்கள், ஒரு தெரிந்து கொள்ளுதலை செய்ய வேண்டிய இடத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் அதை கேட்டும், இருக்கிற விதமாகவே ஒரு போதும் இருக்க முடியாது. நீங்கள் அதை ஏற்றுக் கொண்டால், கிறிஸ்துவை பெறுகிறீர்கள். நீங்கள் அதை மறுத்தால், கிறிஸ்துவுக்கு புறம்பே முத்திரையிடப்படுகிறீர்கள். வார்த்தையை கேட்பதில் உங்களுக்குள்ள மனப்பான்மையே, அந்த வித்தியாசத்தை உண்டாக்குகிறது. 8. நான் இன்றைய காலைப் பொழுதிலே, இந்தப் பட்டணத்திலே இருக்கிறதான ஒரு அருமையான இடத்தில் உள்ள ஒரு கூடாரத்தில், "தேவன் அவருடைய சபை சுதந்திரமாய் இருக்க விரும்புகிறார்" என்கிற அந்த பொருளின் பேரில் பேசிக் கொண்டிருந்தேன். அந்த இடைப்பட்ட ஐம்பது வருட காலத்தில், அனேக காரியங்கள் சம்பவித்திருக்கிறது. அனேக மக்கள், விசுவாசிகள், இந்த உலகத்தால் சிறைபிடிக்கப்பட்டவர்களாய் போனார்கள். ஸ்தாபன தடைகளால் அனேக மக்கள், சில நேரங்களில் ஐக்கியத்திலிருந்து பிரிக்கப்பட்டு அவர்களுக்கான எல்லைகளை வரைந்து கொண்டார்கள். நான் நினைக்கிறேன், இங்கே சில நாட்களுக்கு முன்பு யாரோ ஒருவர், "சகோ. பிரான்ஹாம். நீங்கள் எந்த சபையை சேர்ந்தவர்", என்று என்னைக் கேட்டார். நான் உண்மையில், "ஒரே ஒரு சபை தான் உள்ளது, சபை என்பதற்கு வெளியே அழைக்கப்பட்டவர்கள் என்பது பொருள்" என்றேன். அவர் "ஆனால் நீங்கள் எந்த ஸ்தாபனத்தை சேர்ந்தவர் என்ற அர்த்தத்தில் கேட்கிறேன்" என்றார். நான், "இந்நேரத்தில், எதுவும் இல்லையென்றாலும் அவர்கள் எல்லோரையும் சேர்ந்தவன்" என்றேன். 9. அன்றொரு காலையில் சகோ. ஷக்கரியன் கூறிய கூற்று, என்னை தொட்டது, அவர், பெந்தேகொஸ்தே ஒரு ஸ்தாபனமோ, அல்லது உருவாக்கப்பட்ட அமைப்போ அல்ல! அது புருஷர்களும், ஸ்திரீகளும், தேவனிடத்திலிருந்து பெறுகிற, ஒரு அனுபவமாய் இருக்கிறது என்றார். தேவன்; மெத்தடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரிஸ்பிடேரியன்கள் மற்றும் யாவரும், தேவனுடைய வார்த்தையை கேட்டு அதின்பேரில் செயல்பட தீர்மானிக்கும்போது, இந்த அனுபவத்தை பெறமுடியும். பரிசுத்த ஆவியானவர் ஏறக்குறைய, இரண்டாயிரம் வருஷங்கள் இந்த பூமியில் இருந்து கொண்டிருக்கிறார். மேலும் விருப்பமுள்ள எவரும், அதில் வந்து பங்குகொள்ளலாம். மேலும், சிறைபிடிக்கப்பட்ட ஒவ்வொருவரும், அந்த வார்த்தையை கேட்கும்போது விடுதலையாகலாம். இப்பொழுது, நீங்கள் அதை மறுத்தால், அது மூடிக்கொள்ளும் அல்லது அடைபடும். 10. இங்கே சில நாட்களுக்கு முன்பு, கொலராடோவில் உள்ள கால் நடை பண்ணையில் நான் சவாரி செய்வது வழக்கம். மேலும் அராபாஹோ என்கிற காட்டில், மந்தைகளை நாங்கள் மேய விடுவோம். அங்கே பள்ளத்தாக்கிலே, பண்ணையை வைத்திருக்கிற ஒவ்வொரு மனிதனும், கோடை முழுவதும் ஒரு பசு மேயத் தக்கதான, ஒரு டன் அளவு வைக்கோலை அவனால் வளர்க்க முடியும். காட்டிலாக்கா அதிகாரி அந்த வாயிலில் கடந்து போகும் போது, கால்நடைகளை எண்ணுவான், அநேக நேரங்களில் நான் ஒரு சிறு மந்தை கால்நடைகளோடு, வருட முழுவதும் அதை காட்டிலிடுவதற்காக அங்கு சென்றிருக்கிறேன். அவைகள் நுழையும் போது வெவ்வேறு வித்தியாசமான இன அடையாளங்களுடன், நல்லது, அவைகள் லேசி-கே, டைமன்ட் - டி, அவ்விதமான இன்னும் பல வித்தியாசமான இன அடையாளங்களை, கொண்டிருப்பதை நான் கவனித்தேன். அந்த வாயிலில் அவைகள் கடந்து போகும் போது, வித்தியாசமான இன அடையாளங்களோடு இருந்தன. ஆனால் பதிவு செய்யப்பட்ட, ஹெரேப்போர்ட்ஸ் ரகமே அன்றி, வேறொன்றும் அந்த வாயிலின் ஊடாக செல்லவில்லை. பாதையின் முடிவில் அது அவ்விதமாகத்தான் இருக்கும், என்று நான் நினைக்கிறேன். தேவன் நாம் எந்த இன அடையாளத்தை பெற்றிருக்கிறோம், என்பதை கவனிக்கமாட்டார். ஆனால் உள்ளே போகிற ஒவ்வொரு மனுஷனும், தேவ ஆவியினால் பிறந்திருக்கின்றானா? என்பதையே கவனிப்பார். நீங்கள் எந்த இன அடையாளத்தை அணிந்திருக்கிறீர்கள், என்பது காரியம் அல்ல; நீங்கள் ஒரே ஆவியினால் பிறந்த தேவனுடைய பரிசுத்தவானாய், அசலான விசுவாசியாய், இருக்கும் பட்சத்தில், உலகம் இருப்பது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாக, அந்த நாளில், அந்த வாயிலின் ஊடாக கடந்து செல்வீர்கள். என்னே! ஒரு அழகான காட்சி. 11. பிறகு நாம் அங்கிருக்கிற அந்த மந்தை மேய்ப்பவர்களுடைய, இடத்தை குறித்து கவனிப்போம். சில நேரங்களில் இந்த பெரிய காட்டிற்குள்ளாக மேய்ச்சலுக்கு பிறகு, அவைகள் கொண்டு போகப்பட்டு தற்காலிக வேலிகளுக்குள்ளாக அடைக்கப்படும். மற்றும் தெரிந்து எடுக்கப்பட்ட சில கால்நடைகள், குறிப்பிட்ட பள்ளத்தாக்கில் மேய்ச்சலுக்காக போகும். மேலும் அவைகள் தற்காலிக வேலியில் அடைக்கப்படுவதால், அந்த குறிப்பிட்ட இடத்தைவிட்டு அவைகளால் வெளியேற முடியாது. ஆனால், பிறகு அந்த பருவக்காலத்தின் முடிவில், இந்த தற்காலிக வேலிகள் யாவும் நீக்கப்படும். அப்போது எல்லா கால்நடைகளும், மகத்தான பெரிய யூபிலியை கொண்டாடுவதற்காக, ஒன்று சேரும். அவைகள் யாவும் ஹெரேபோர்ட்ஸ் ரகத்தை சேர்ந்தவைகள். அதனால் அவைகள் யாவும் ஒரு யூபிலியை கொண்டாடுவதற்கு, உரிமைப் பெற்றிருக்கின்றன. வருகிறதான வாரத்தில், ஸ்தாபனத்தின் எல்லா தற்காலிக வேலிகளும் தகர்த்தெறியப்பட்டு, மறுபிறப்படைந்த தேவனுடைய பிள்ளைகள் யாவரும், மகத்தான பரிசுத்த ஆவியின் பெரிய யூபிலி கொண்டாட்டத்தில், அவர்கள் மறுபடியும் ஒன்றாக கூட்டிச் சேர்க்கப்படுவதற்காக, நான் தேவனிடத்தில் ஜெபிக்கிறேன். 12. இந்த காலங்களினூடாக, கடந்த ஐம்பது வருடங்களில், அநேக காரியங்கள் சபைகளில் சம்பவித்திருக்கிறது. அநேக மக்கள் விழுந்து போனார்கள். நாங்கள் இதைச் சொல்வதற்கு வருந்துகிறோம். ஆனால் இந்த பிரசித்திப்பெற்ற தேவாலயம், அதனுடைய அழகில் இருப்பதற்காக நாம் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம். ஆனால், இன்று நான் நிச்சயத்திருக்கிறேன், சகோதரனோடு இருக்கிற ஒவ்வொரு விசுவாசியும்... (ஒலிநாடாவில் காலியிடம்) மற்றும் யாவரும் ஆதியிலே இருந்தது போல் மறுபடியும் பண்டையகால பரிசுத்த ஆவியின் வெளியரங்கமான ஊற்றப்படுதலுக்காக, தேவனுடைய பலிபீடத்தில், நாங்கள் பெற்று வைத்திருக்கிறதான யாவற்றுக்கும், நீங்களும் பங்குள்ளவர்களாய் இருக்கிறீர்கள். என் கிறிஸ்துவ நண்பனே! நமக்கு இன்று தேவையானது என்னவெனில், ஒரு யூபிலியின் நேரம். இன்று நமது தேவை அதுவே. இப்பொழுது, பிசாசு அநேக விசுவாசிகளை இந்த இடைப்பட்ட காலத்தில் சிறைப்பிடித்துக் கொண்டான். அதாவது, குளிர்ந்த நிலையும், உலகமும் சபைக்குள்ளாக நழுவி வந்திருக்கிறது. இப்பொழுது, நாம் வேறொரு பொருளை எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் உங்களில் ஒருவனாக இருந்து நான் சிந்திக்கிறதாவது, நாம் வழக்கமாக பெற்றிருந்த பண்டைய கால பரிசுத்தஆவி எழுப்புதலின் கொண்டாட்டத்தில், இங்கு நாம் கூடி வந்திருப்பதே காரியமாய் இருக்கிறது. நம்முடைய பிதாக்கள் அதைப்பற்றி, அதாவது எவ்விதமாக தேவ தூதர்கள் கீழே இறங்கி வந்து கூட்டங்களில் பாடினார்கள் என்றும், தேவனுடைய வல்லமை எவ்வாறு ஆட்கொண்டது என்றும், பரிசுத்தவான்கள் எவ்வாறு மறுபடியும் பிறந்தார்கள் என்றும், மகத்தான காரியங்கள் சம்பவித்ததென்றும், சொல்லக் கேட்டிருக்கிறேன். மேலும், அது பண்டையகால, வனாந்திரப் பின்னணியிலிருந்து, நீலவானம் போன்ற தெளிவுள்ள, பாவத்தைக் கொல்லும் பிரசங்கத்திலிருந்து வருகிறது. பண்டைய காலச் சுத்திகரிப்பின் வகையில், ஒரு வேளை புருஷர்கள் அவர்கள் மொழியின் அரிச்சுவடுகளை (அ,ஆ,இ; A,B,C,) அறியாதவர்களாய், இருந்திருக்கலாம். ஆனால் கிறிஸ்துவை அறிந்தவர்களாயும் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை பெற்றவர்களாயும், இருந்தார்கள். ஆகவே தான் நாம் இன்று ஒரு பண்டையகாலப் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்திற்கும், தேவனுடைய ஆசீர்வாதத்தின் வெளியரங்கமான ஊற்றப்படுத லுக்காகவும், பசியுள்ளவர்களாயிருக்கிறோம். மறுபடியும் பழைய வரிசைக்குத் திரும்புவோம். 13. அநேக நேரங்களில் உலகம் உள்ளே நழுவி வரும்படி, நாம் விட்டுவிடுகிறோம். இன்று நம்முடைய சபைகளில், அது தான் காரியம். நாம் சிறிது இங்கேயும் அங்கேயும் விட்டுவிடும், வகையை சேர்ந்தவர்களாகிவிட்டோம். பிசாசானவன் ஒரு இடத்திலிருந்து, மற்றொரு இடத்திற்கு வந்து, ஒரு சிறு பகுதியைப் பிடித்துக் கொண்டு, அப்படியே நழுவி உள்ளே வந்து, இங்கே ஒரு சிறு பகுதியையும், அங்கே ஒரு சிறு பகுதியையும், பிடித்துவிடுகிறான். மேலும், முதலாவது என்ன நடக்கும் தெரியுமா? அது முழுக் காரியத்தையும் குழப்பத்திற்குள்ளாக்கிவிடும். ஆனால், நாம் இங்கு கொண்டிருக்கிறது, இந்தப் பண்டைய காலப் பேரணி நடக்கும் சமயத்தில் நான் தேவனிடத்தில் ஜெபிப்பது என்னவெனில், மனிதர்கள் தங்களுடைய எல்லாப் பாரம்பரியங்களையும், தடை செய்கிற எல்லா காரியங்களையும், மறந்து, பாரமான யாவற்றையும் தள்ளிவிட்டு, மக்கள் மறுபிறப்பு அடைகிறதான ஓர் பண்டைய காலக் கூட்டத்திற்கு, திரும்ப வேண்டும் என்பதே!பாவிகளுக்காகவும், இந்த கூட்டத்தில் வருகிறதான காரியங்களுக்காகவும், பலிபீடத்திலிருந்து தேவனிடத்தில் ஜெபிக்கிறதான, நூற்றுக்கணக்கான, ஆவியினால் நிரப்பப்பட்ட, மக்களை தேவன் நமக்கு கொடுக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். ஓ! என்னே ஒரு வித்தியாசம். இப்பொழுது, ஜனங்களே, நான் உங்கள் யாவரையும் நேசிக்கிறேன்; நான் காலம் தவறி பிறந்தவனாய் இருந்தபோதும், என்னை உங்கள் சகோதரனாக தழுவிக் கொண்டீர்கள். ஆனாலும், நான் பொறுப்புள்ளவனாய் இருக்கிறேன். மேலும் நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்குள், பிரவேசித்துக் கொண்டிருக்கிறோம், என்று நான் விசுவாசிக்கிறேன். மேலும் நாம் கடைசி காலத்திற்குள் இருக்கிறோம், என்று நான் நம்புகிறேன். 14. இயேசு அனுக்கிரக வருஷத்தைப் பிரசங்கித்தார், என்பதை நீங்கள் அறிவீர்கள். அவருடைய அந்தப் பிரசங்கத்திற்குப் பிறகு, யூபிலி வருகிறது. இந்தக் கடைசி நாட்களில் நமக்கு, இங்கே ஒரு மகத்தான வெளியரங்கமான, ஊற்றப்படுதலைக் கொண்டிருந்தோம். தேவன் இந்த தேசத்தினூடாக, நம்மைப் பண்டையகாலக் கூட்டங்களில் சந்தித்தார் என்றும், இப்பொழுது அப்படிப்பட்ட கூட்டங்களின் முடிவில் தான் நாம் இருக்கிறோம் என்றும், நான் நம்புகிறேன். நாம் பாதையின் முடிவில், கர்த்தராகிய இயேசுவின் வருகைக்காக, காத்துக் கொண்டிருக்கிறோம் என்று நான் விசுவாசிக்கிறேன். நாம் காத்துக் கொண்டிருக்கிற அடுத்த காரியம் என்னவெனில், வழிவிலகி போனவர்கள், மற்றும் வெவ்வேறு காரியங்களால் சிறைபிடிக்கப்பட்ட, தேவனுடைய மக்கள் அனைவரும், ஒன்று சேர்க்கப்படுவதற்காகவே, என்று நான் நினைக்கிறேன். சற்று நம்முடைய சபையின், சில ஒழுக்க நெறிகளை பார்ப்போம், பல வருடங்களுக்கு முன்பாக, திருமதி. மெக்பர்ஸன், இந்த பிரசங்க பீடத்தில் நின்று கொண்டிருக்க, மற்றவர்கள் மேலும் கீழுமாய் இருந்தார்கள். ஒற்றைக் கண் பார்வையுடைய, இந்த கருப்பின மனிதன் இங்கே அசூசா தெருவில், அவர்கள் பண்டைய காலச் சுவிசேஷத்தை பிரசங்கித்து, புருஷர்களும், ஸ்திரீகளும், தெய்வீக மக்களாக ஜீவித்தார்கள், அங்கே மகத்தான காரியங்கள் சம்பவித்தது. ஆனால், இன்று நாம் அந்த தடைகளை கீழே இறக்கிவிட்டுவிட்டோம். ஒரு காரியத்துக்காக, சுத்தியால் அடிப்பது போல் அல்ல, அதிலே எனக்கு நம்பிக்கையும், இல்லை. ஆனால், சகோதரனே, நான் விசுவாசிக்கிறேன். இன்று இங்கே கூடி அமர்ந்திருக்கிற, ஐந்தாயிரம் சிறந்த மக்கள் மத்தியில் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார். மேலும் நாம் இருக்கிற இந்த கூடுகையில், நாம் மட்டும் நம்முடைய, ஒவ்வொரு உள்ளங்களிலும், தேவன் தன்னுடைய வழியை செய்யும்படி விட்டுக் கொடுப்போமானால், அது கடல் கடந்து, கரை கடந்து, செய்திதாள்கள் கொண்டு செல்லத் தக்கதான, ஓர் எழுப்புதலை துவங்கும், என்று நான் விசுவாசிக்கிறேன். வெட்டி செதுக்குகிற, பழைய கொள்கையின் வரிசைக்குத் திரும்புவோமாக! 15. பிசாசு நம்மில் அநேகரை சிறைப்பிடித்துக் கொண்டான். பல வருடங்களுக்கு முன்னால், ஸ்திரீகளாகிய நீங்கள், உங்கள் முடியை கத்தரிப்பது, உங்களுக்கு பாவமாயிருந்தது, ஆனால் இன்றோ, பெந்தேகொஸ்தே ஸ்திரீகள், பார்ப்பதற்கு தெருவில் உள்ள ஸ்திரீகளைப் போலவே காணப்படுகிறார்கள். உங்களால், எந்த வித்தியாசத்தையும் சொல்ல முடியாது. அதுசரியே, பண்டைய நாட்களில், ஸ்திரீகள் ஒப்பனை (Make-up) செய்வது, பாவமாகவே கருதப்பட்டது. ஆனால், இன்றைக்கோ உங்களால் பரிசுத்தவானா? பாவியா? என்று சொல்ல முடியாது. காரியம் என்ன? பழைய வெட்டி செதுக்குகிற, கொள்கையின் வரிசைக்கு, மறுபடியும் திரும்புவோம். உண்மையான பெந்தேகொஸ்தேக்கும், பழைய அசூசா அனுபவத்திற்கும் திரும்புவோம். அது சரியே! மேலும், பிறகு பிரசங்கிகளாகிய உங்களில், சிலரும் மனிதர்களாகிய உங்களில், சிலரும் தடை கம்பிகளை கீழே இறக்கி விட்டுவிட்டீர்கள், ஏன், உங்களுக்குத் தெரியும், உங்களைக் குறித்து நான் வெட்கப்படுகிறேன். எந்த ஒரு மனிதனாவது, தன்னை மறுபடியும் பிறந்த தேவனுடைய பிள்ளை, என்று கூறிக்கொண்டு, இக்காலத்தில் பெந்தேகொஸ்தே மக்கள், தங்கள் ஸ்திரீகளை அனுமதித்த விதமாக, தன்னுடைய மனைவி நடந்து கொள்ளும்படி அனுமதிப்பானாகில், அது உனக்குள் அதிகளவு புருஷத் தன்மை இல்லை, என்பதைக் காட்டுகிறது. அதுதான் நிச்சயமான உண்மை. இன்று, நம்முடைய தேவை என்னவெனில், சகோதரனே, அந்தப் பழைய பாணியிலான பரிசுத்த ஆவியின், ஞானஸ்நானத்திற்கான அழைப்பும், மக்கள் பழைய நிலைமைக்குத் திரும்புவதும் தானே. ஆமென். அது தான் உண்மையாய் இருக்கிறது. சகோதரனே அது நம்மை சிறிது, வறுத்தெடுப்பதாய் இருக்கலாம். ஆனால், நான் முழுவதும் எரிந்து போகிறதைக் காட்டிலும், இங்கு சிறிதளவு, வறுத்தலுக்கு உள்ளாவதே, நல்லது. பிசாசு, உங்களை சிறைப்பிடித்து வைத்திருப்பானாகில், இது யூபிலி நேரமாய் இருக்கிறது. இதுவே, மறுபடியும் பண்டையகால அனுபவத்திற்கும், பண்டையகால வேதத்திற்கும், தேவனுடைய வல்லமை, அலைகளாக அசைவாடுதலை, நாம் உணருகிறதான இடத்திற்கு, நாம் திரும்புகிற நேரமிதுவே, அதுதான், புருஷர்களையும், ஸ்திரிகளையும் பீடத்தண்டை அழைக்கும். அது அவர்களை, தங்களுடைய விடுதலைக்காக, முழு இரவும் முகங்குப்புற விழுந்து, தேவனிடத்தில் ஜெபிக்கும்படி செய்யும் ஆமென். என்னே ஒரு நேரம். 16. நான் உங்களுக்கு சொல்லுகிறேன். திருமதி மெக்பர்ஸசன் கடந்து போய்விட்டார்கள். அநேக பண்டைய காலத்தவர்கள், கடந்து போய்விட்டார்கள், ஆனால், அவர்கள் இன்று, மகிமையின் பால்கனியில் இருந்து, இதை நோக்கி பார்க்கக் கூடுமானால், நான் இங்கு நிற்பது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாக அவர்கள் அதற்கு "ஆமென்" என்று கத்துவார்கள், அது சரியே, பழைய மாதிரியான வெட்டி செதுக்குகிற, கொள்கையின் வரிசைக்கும், பெந்தேகொஸ்தேக்கும், மறுபடியும் திரும்பக் கடவோம். நாம் செய்ய வேண்டிய காரியம் என்னவெனில், உண்மையற்ற கவர்ச்சிகரமான நடனமாகிய காரியங்களை, நாம் விட்டுவிட்டு, வேதத்திற்கும், பண்டைய கால பரிசுத்த ஆவிக்கும், புருஷனும், ஸ்திரீயும், தங்கள் பார்வையிலும், நடத்தையிலும், நடக்கையிலும், கிறிஸ்தவர்களாய் இருக்கிற நிலைக்கு, திரும்புவது மாத்திரமே. ஆமென். ஒருவேளை, நான் சற்று உணர்ச்சிவசப்பட்டவன், என்று நீங்கள் நினைக்க கூடும், ஆனால், நான் கொஞ்சம் பயித்தியமாயிருக்கிறேன்; நான் உங்களுக்கு சொல்லுகிறேன். நான் இவ்விதமாக இருப்பதையே, நேசிக்கிறேன். சில நாட்களுக்கு முன்பு, இங்கே லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள, வீதிகளில் போய்க் கொண்டிருந்தேன். அப்போது "நான் கிறிஸ்துவுக்கு முட்டாள்'' என்று எழுதியிருக்கிற அட்டையை, தனக்கு முன்புறம் மாட்டி கொண்டிருந்த, ஒரு மனுஷனைக் கண்டேன். மேலும் அவன் பின்புறத்தில், "நீங்கள் யாருடைய முட்டாள்?" என்று கேள்விக் கேட்டிருந்தான். ஆகையால் பிசாசுக்கு முட்டாளாய் இருப்பதைவிட, நான் எந்த சமயத்திலும், கிறிஸ்துவுக்கு முட்டாளாய் இருப்பேன். 17. இன்று நம்முடைய தேவை என்ன? ஊழியக்காரர்களே! இன்று, நம்முடைய தேவை என்ன? சகோதர, சகோதரிகளே! நம்முடைய தேவையெல்லாம், இந்த ஒரு காரியம் மாத்திரமே, பிசாசானவன் நம்முடைய சபைகளுக்குள்ளாக நுழைந்து, நம்மை வித்தியாசமற்ற, சம்பிரதாயமுள்ள, மக்களாய் மாற்றிவிட்டான் நம்முடைய தேவை என்னவெனில், திரும்ப அழைக்கப்டுதலே, நம்முடைய தேவை என்னவெனில், ஒரு பழைய மாதிரியான, மறுபடியுமான கூடுகையும், யூபிலி தொனியை எழுப்புதலும், பரிசுத்தாவியின் ஊற்றப்படுதலும், ஆவியின் வெளியரங்கமாகுதலுமே! ஆமென். நிச்சயமாக, அதுதானே, நம்மை ஜெபக் கூட்டத்திற்கு திரும்பி கொண்டு வருகிறதான,காரணமாய் இருக்கிறது. அது உண்மை. நாம் உலகத்துக்கு ஒத்த வேஷம் தரிக்க ஆரம்பித்திருக்கிறோம். உலகம் செய்கிறதான அதே காரியங்களை, நாமும் செய்கிறோம். அது எப்படி நிகழ்ந்தது என்றால், அதிகப்படியான ஹாலிவுட் சுவிசேஷமும், அதிப்படியான தொலைக்காட்சியும் தான். ஜெபக் கூட்டங்களுக்கு போவதற்கு பதிலாக, வீடுகளில் இராத்தங்கி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பது மற்றும் லூசியை நேசிப்பது யார் (Who Loves Lucy) என்பது போன்ற, அவ்விதமான எல்லா நிகழ்ச்சிகளையும் பார்த்து, தேவனுடைய வார்த்தைக்கும், சபைக்கும், தூரமாய் இருப்பதுமே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். சகோதரனே, அதுதான் காரணமாய் இருக்கிறது. அது உண்மை, என்பதை நீங்கள் அறிவீர்கள். பண்டைய கால பெந்தெகொஸ்தே அனுபவமாகிய, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்திற்கு, திரும்பி வர, இன்று தேவன் நமக்கு உதவி செய்வாராக! 18. மேலும், அநேகமான, அவ்விதமான காரியங்களுக்கு காரணம் என்னவெனில், மேய்ப்பரும் தடைக் கம்பிகளை இறக்கி விட்டுவிட்டார். சபையாரே, அது நிச்சயமாக சரியே, ஆம் ஐயா, இன்று நம்முடைய தேவை என்னவெனில், தெரிந்தெடுத்து, வெளியே அழைத்து, வெளியே இழுக்கும், யூபிலி ஆகிய, பண்டையகால எழுப்புதல் தான். அது உண்மை. பாவிகள், தங்களுடைய கல்வாரியின் பாதையில் அழுது கொண்டு இருக்கிற... இங்கே, சில நாட்களுக்கு முன்பு, ஒரு குறிப்பிட்ட பெரிய, சபையினுடைய அங்கத்தினர், அது ஒரு குறிப்பிட்ட பெந்தேகொஸ்தே ஸ்தாபனம். அந்த மனிதன், சபை ஐக்கியத்திற்குள் வர விரும்பினான். ஆனால், அதை வெளிப்படையாக பொதுவில் செய்ய விரும்பவில்லை. மேலும், டீக்கன்மார்கள் திரைமறைவில் அவனை ஐக்கியத்திற்குள் சேர்த்துக் கொண்டார்கள். அவன் என்ன செய்திருக்க வேண்டுமென்றால், திரையை உதைத்து பின்னுக்குத் தள்ளி, பலிபீடத்தண்டைக்கு வந்திருக்க வேண்டும். அவ்விதமாக, அசலான பெந்தேகொஸ்தேயின் அனுபவத்திற்கு, திரும்ப அழைப்பது தான் இன்று நம்முடைய தேவையாய் இருக்கிறது. மறுபடியும், அது தான் நமக்கு தேவை. ஒரு புதிய தூதனுடைய ஆலயம் நமக்கு தேவையில்லை. புதிய சபைகள் நமக்கு தேவையில்லை. இன்று மண்ணின் மேல் நிற்கிற, சில அருமையான சபைகளை நாம் பெற்றிருக்கிறோம். நமக்கு ஒரு புதிய தூதனுடைய ஆலயம் தேவையில்லை. இன்று நமது தேவையெல்லாம், அந்த தூதனுடைய ஆலயத்தில், ஒரு எழுப்புதல் தான், இன்று நம்முடைய தேவை என்னவெனில், பெந்தேகொஸ்தேயில், ஒரு எழுப்புதல். 19. நமக்கு ஒரு புதிய பெந்தெகொஸ்தே ஸ்தாபனம் தேவையில்லை, இல்லை ஐயா, தேவன் அதை தடை செய்வாராக! நமக்கு ஒரு புதிய ஸ்தாபனம் தேவையில்லை. ஆனால், நாம் ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டதற்குள், ஒரு எழுப்புதல் தேவையாயிருக்கிறது. ஒரு நல்ல பண்டையகால எழுப்புதல் தான் கச்சிதமான, நம்முடைய தேவையாயிருக்கிறது. அது உண்மை என்று, தேவன் அறிந்திருக்கிறார். அப்போது, இன்னொரு விசையாக தேவனுடைய வல்லமைகள், இறங்குவதை நீங்கள் காண்பீர்கள். மேலும், ஆவியில் நிரப்பப்பட்ட, செய்திகளும், ஆவியால் நிரப்பப்பட்ட மக்களும், உலகத்திற்குள்ளாக, போய் சுவிசேஷத்தை பிரசங்கிப்பதற்கு முன்பாக, பரிசுத்த ஆவியானவர் அசைவாடுகிற, முசுக்கொட்டை செடியின் சத்தம், அங்கு தானே உண்டாயிருக்கும். நாம் நிச்சயமாகவே, அவர் செய்தவைகளுக்காக கடமைப்பட்டவர் களாயிருக்கிறோம். நாம் இந்த எல்லாக் காரியங்களுக்காவும், நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். ஆனால், சகோதர சகோதரிகளே, இன்று நான், என்ன அர்த்தத்தில் சொல்கிறேன் என்றால், நமக்கு ஒரு மறுபிரதிஷ்டை , அவசியமாய் இருக்கிறது. மற்றுமொரு வெளியரங்கமான ஊற்றப்படுதல், நமக்கு அவசியமாயிருக்கிறது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள், இந்த அழகான ஆலயத்தில் கூடியிருக்கும், இந்த மத்தியான வேளையானது, என்னே ஒரு அழகான நேரம்... நாம் நம்முடைய ஜீவியங்களை மறுபடியும், மறு பிரதிஷ்டை செய்து, நம்முடைய உள்ளங்களில் தீர்மானம் செய்தவர்களாய், வீட்டிற்கு சென்று, முகங்களை கழுவி, சுத்தப்பபடுத்தி, நம்முடைய முகங்களை மட்டுமல்ல, நம்முடைய ஆத்துமாக்களையும் கூட, லாஸ் ஏஞ்சல்ஸின் தண்ணீரினால் அல்ல, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலும், தேவனுடைய வல்லமையினாலும், கழுவப்பட்டவர்களாய், மறுபடியும் ஒரு புதிய ஜீவியத்தை துவங்குவோமானால், அது எப்படியாயிருக்கும். ஆட்டுக் குட்டியானவருடைய இரத்தத்தில் கழுவப்படுதலே, இன்று நம்முடைய தேவையாய் இருக்கிறது. ஆம் ஐயா, 20. என்னே! ஒரு காட்சி, என்னே! ஒரு நேரம், என்னே! ஒரு... ஏன், நான் உங்களை நீண்ட நேரம் வைத்திருக்க விரும்பவில்லை. ஆனால் நான் உங்களுக்கு சொல்லுகிறேன். நண்பர்களே! இன்று நம்முடைய தேவை என்னவெனில், சில நல்ல பண்டைய கால, நீண்ட நேரம் தரித்திருக்கிற, கூட்டங்கள் தான். ஏன், முந்தைய நாட்களில், அந்த பழைய பெந்தெகொஸ்தே புத்தகங்களை நான் படித்தபோது, அவர்கள் இரவெல்லாம் பிரசங்கித்தார்கள், இரவெல்லாம் ஜெபித்தார்கள். அது என்னே ஒரு நேரமாயிருந்தது. மேலும், நாம் அதிலிருந்து விழுந்து விலகிபோன வேளையிலும், தேவனோ, காலங்களினூடாக மற்ற எந்த காலத்திலும், அவருடைய பரிசுத்த ஆவியை கொடுக்க சித்தமுடையவராயிருந்தாரோ, அவ்விதமாகவே, சபையாருக்கு அவருடைய பரிசுத்த ஆவியை இன்றும், ஊற்ற சித்தமுடையவராய் இருக்கிறார். நீ மட்டும், அதை ஏற்றுக் கொள்கிற இருதயத்தை, உடையவனாய் இருந்தால், ஊற்றத் தக்கதாக தேவன் வானத்தின் ஒவ்வொரு மழையின் மதகுகளை நிரப்பி வைத்திருக்கிறார். அது சரியே ஆமென்! நாம் அடையாளங்களையும், அதிசயங்களையும், கண்டோம். பரிசுத்த ஆவியானவருடைய, எல்லா பிரத்தியட்சத்திற்காகவும், நான் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். அந்நிய பாஷைகளில் பேசுகிற ஒவ்வொரு நபருக்காகவும், நான் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். அதை வியாக்கியானிக்கிற, ஒவ்வொரு நபருக்காகவும், ஒவ்வொரு சுகமளிக்கும் வரத்துக்காகவும், ஒவ்வொரு தீர்க்கதரிசன வரத்துக்காகவும், தேவன் செய்த ஒவ்வொரு காரியத்துக்காகவும், நான் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். ஒவ்வொரு மேய்ப்பனுக்காகவும், ஒவ்வொரு சுவிசேஷகனுக்காவும், அவருடைய சரீரத்தின் ஒவ்வொரு அங்கத்தினருக்காகவும், நான் தேவனுக்கு நன்றியுடையவனாய் இருக்கிறேன். ஆனால் இன்று நம்முடைய தேவை என்னவெனில், ஒரு மறுபிரதிஷ்டையும், ஒன்றாக கூடிவருதலும், பழைய பாதைக்கு திரும்பி போவதுமே. மேலும் சகோதரனே, நாம் அதை செய்யவில்லையென்றால், அடுத்த ஐம்பது வருடங்களில், அல்லது... அவ்வளவு காலம் அவர் தாழ்த்தமாட்டார். ஆனால் இன்னும் பத்து வருடங்கள், நாம் இங்கு இருந்து, நாம் தீவிரமாய் ஒன்று கூடி, பழைய வெட்டி வடிவமைக்கிற கொள்கையின் வரிசைக்கு மறுபடியும் திரும்பவில்லையானால், அது எப்படி இருக்கும்? பண்டைய கால அசூசா தெருவின், எழுப்புதலுக்கு திரும்பி வாருங்கள். அதை நாம் பெற்றே ஆகவேண்டும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, நமக்கு எவ்வளவு மகிமை உடையவராய் இருக்கிறார் என்றும், அவர் நமக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்றும், சிந்தித்துப் பார்க்கக் கூடுமானால், எவ்வளவாக நாம் ஒருவரும் அழிந்து போக சித்தமில்லாமல், யாவரும் மனந்திரும்புதலுக்குள் வரவேண்டும் என்று, நீடிய பொருமை உடையவராய் இருக்கிறார் என்பதை, அறிந்து கொள்ள முடியும். 21. சில நாட்களுக்கு முன்பாக, நான் இருந்த சிறிய பட்டணத்திலே, ஒரு கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தோம். நான் தேசத்துக்கு வெளியே இருக்க வேண்டியதாயிற்று, நான் அங்கிருந்தபோது, அருமையான ஒரு சிறிய இடத்தில் புசித்துக் கொண்டிருந்தேன். மேலும், நான் கவனித்தேன், அது ஒரு ஞாயிற்று கிழமையாய் இருந்ததால், அவர்கள் கடையை மூடிவிட்டு, சபைக்கு சென்றுவிட்டனர். அவர்கள் சகோதர சபையை (Church of the Brothern) சேர்ந்தவர்கள். மேலும், அந்த மதிய வேளையில், அல்லது மதிய வேளை ஆகாரத்துக்கு பிறகு, நான் பசியை உணர்ந்தவனாய், ஒரு சேன்ட்விட்ச்சை புசிக்க வேண்டும் என்று நினைத்தேன். நான் ஒரு சாதாரண சிறிய உணவு விடுதிக்கு போக, தெருவை கடந்து சென்றேன். அவ்விடத்திற்குள் சென்றது, ஒரு அவமானமாய் இருந்தது. அங்கு இருந்ததான சூதாடும் இயந்திரத்தில், சட்டமே விளையாடி கொண்டிருந்தது. (சட்டம் ஒழுங்கை கண்காணிக்க வேண்டிய போலீஸ் - தமிழாக்கியோன்) சூதாட்டமானது, அந்த மாநிலத்தில் சட்ட விரோதமாய் இருந்தது. ஆனால், சட்டமே, சூதாட்ட இயந்திரத்தில் விளையாடி கொண்டிருந்தது. இப்பொழுது, அது நம்முடைய தேசத்தின் சட்டங்களை எவ்வளவு தரம் தாழ்த்த செய்திருக்கிறது என்பதையும், அது பார்ப்பதற்கு என் கண்களுக்கு எப்படி இருந்தது என்றும், உங்களால் புரிந்து கொள்ள முடியும். நாம் மரியாதை கொடுத்து, உயர்த்திப் பிடிக்கப்பட வேண்டிய அந்த சட்டமே, பார்க்கும் போது, அப்படியே சுற்றித் திரும்பி, சூதாடும் எந்திரத்தில் விளையாடிக் கொண்டிருந்தது. ஒரு கிறிஸ்தவன், உலகத்தைப் போல் நடந்து கொள்ளும்போது, அவிசுவாசிகள் அவ்விதமாகதான் பார்க்கிறார்கள். அதே பாதிப்பைத் தான் அவர்கள் மேல், அது உண்டாக்குகிறது. 22. நான் அந்த மூலையில் திரும்பி பார்த்தபோது, மிகவும் அவலட்சணமாக உடுத்தியிருந்த, ஒரு வாலிப ஸ்திரீயை கவனித்தேன். மேலும், அவள் அங்கே வந்து, அந்த மேசைகளில் காத்துக் கொண்டிருந்தபோது, அங்கே இருந்த அந்த பையன்கள், அவளிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட விதமானது. எனது வலது பக்கத்தில் உட்கார்ந்து இருந்த, ஒரு மூதாட்டியை நான் பார்த்தேன். அவள் என்னுடைய பாட்டியின் வயதில் இருந்தாள். அவள் மிகவும் ஒழுக்கக் கேடான, உடைகளை அணிந்தவளாய், உதடுகளில் ஒரு வகையான நீலச்சாயம் பூசினவளாய், அமர்ந்திருந்தாள். இப்போது, ஒரு சாதாரண நபர் எவரும் நீல நிறம் கொண்ட உதடுகளை பெற்றிருக்க மாட்டார்கள், என்பதை எவரும் அறிவர். ஆனால், அவர்கள் அது நீல நிறமாக காணப்பட வேண்டும் என்று, அதன் மேல் சாயத்தை பூசினவர்களாய் ஒப்பனை செய்து கொண்டு, அதை என்னவென்று அழைப்பீர்கள், தன் கண்களின் மேலாக அவள் பூசியிருந்தாள். அவள் இரண்டு வயோதிபர்களோடு, அங்கே உட்கார்ந்திருந்தாள். மேலும் நான் நினைத்தேன். "என் தேவனே, நீர் எவ்விதமாக நின்று இப்படிப்பட்ட காரியங்களை பார்க்க முடிகிறது?". மேலும், கர்த்தர் என்னை கதவுக்கு பின்னாக அழைத்தார். ''அங்கே நான் ஒரு தரிசனத்தை கண்டேன். அதில் உலக உருண்டையையும், அது சுற்றிக் கொண்டிருப்பதையும் பார்த்தேன். மேலும் என்னுடைய பாவங்களும், மற்றவர்களுடைய பாவங்களும், போய்க் கொண்டிருப்பதை பார்த்தேன். நான், "தேவனே நீர் ஏன் இந்த ஸ்தலத்தை ஊதித் தள்ளிவிடக் கூடாது? எப்படி உம்மால் சகித்துக் கொள்ள முடிகிறது" என்று நினைத்தேன். 23. ஆனால், பிறகு நான், இந்த உலகத்தை சுற்றிலும் இரத்தாம்பர ஓடை ஓடுவதை பார்த்தேன். அங்கே கர்த்தராகிய இயேசு தன்னுடைய முழு இரக்கத்தோடு நின்று, இந்த பூமியை கீழே நோக்கி பார்ப்பதை, நான் கண்டேன். மேலும், என்னுடைய பாவங்கள், அவரிடம் சென்றபோது, அவருடைய இரத்தமானது தேவனுக்கு முன்பாக, ஒரு பாதுகாப்பு அரணை போல் (Bumper) செயல்படுவதை நான் பார்த்தேன். அவைகளால், அவரிடம் நெருங்க முடியவில்லை, மேலும் ஒவ்வொரு முறையும் நான், ஏதாவது தவறை செய்யும் போதெல்லாம், அவருடைய இரத்தம் எனக்கும், தேவனுடைய நியாயதீர்ப்புக்கும், இடையில் நிற்பதை நான் கண்டேன். நான், அவரிடம் நடந்து சென்றேன்; நான் தரிசனத்தில் "கர்த்தாவே" என்றேன். நான், "என் பாவங்களா அதை செய்கிறது? அப்படியானால், தேவனே, என்னை மன்னியும், நான் அதை செய்ய வேண்டும் என்று செய்யவில்லை", என்றேன். மேலும், அவர், தன்னுடைய பக்கத்தில் கையை விட்டு, என் பெயர் எழுதியிருந்த ஒரு சிறிய புத்தகத்தை எடுத்து, (அது முழுவதும் பாவங்களால் நிறைந்திருந்தது) அதின் மேல் "மன்னிக்கப்பட்டது" என்று குறுக்காக எழுதி, அவருக்கு பின்பாக இருந்த மறதி கடலில் வீசி எறிந்தார். அவர், "இப்பொழுது நான் உன்னுடைய பாவங்களை மன்னிக்கிறேன், ஆனால் அந்த ஸ்திரீயை குறித்து என்ன சொல்லுகிறாய்?" என்றார். நான், தரிசனத்தை விட்டு வெளியே வந்தபோது, நான், அங்கு சென்று அவளண்டை உட்கார்ந்தேன். நான், "ஸ்திரியே, நீங்கள் எப்போதாவது கிறிஸ்தவராய் இருந்தது உண்டா?" என்று கேட்டேன். அவள் "ஏன் அதை குறித்து என்னிடம் கேட்கிறீர்கள்", என்றாள்? 24. நான் அவளோடு பேசத் துவங்கினபோது, இருதயமே உடைந்து போகத்தக்க அளவு, அவள், எப்படியாய் சபைக்குள் காரியங்கள் எழும்பினதென்றும், எப்படியாய் சபையைவிட்டு வெளியேறினாள் என்ற கதையை சொன்னாள். அதன் பின், அவள், தவறான பாதையை எடுத்துக் கொண்டாள். அவள் இரண்டு மகள்களை கொண்டிருந்தாள். அவர்கள் அருமையான ஸ்திரீகள். மேலும் இந்த மத்தியான வேளையில், எவ்விதமாக, அந்த இரண்டு குடிகாரர்களோடு சேர்ந்து இருக்கிறேன் என்பதையும்... கர்த்தராகிய இயேசு அவளை இன்னுமாய் நேசிக்கிறபடியால், அவர் எனக்கு என்ன காண்பித்தார் என்பதையும், நான் அவளிடம் கூறினேன். மேசையின் குறுக்காக சென்று, என் கரங்களை நீட்டி, அவளுடைய கரங்களை பற்றி, "ஸ்திரீயே, நீ என்ன செய்திருந்தாலும், அதை குறித்து எனக்கு ஒரு அக்கரையும் இல்லை; கிறிஸ்து உன்னை இன்னுமாய் நேசிக்கிறார்", என்று கூறினேன். சரியாக, அந்த மேசையை விட்டு வெளியே வந்து, அதன் பின்புறம் அந்த தரையின் மையப் பகுதிக்கு சென்று, முழங்காலில் விழுந்தாள். அதைக் கண்ட போலீஸ்காரரும், மற்றவர்களும், தங்களுடைய தொப்பியை கழற்றினார்கள். அங்கே நாங்கள், ஒரு பண்டையகால ஜெபக் கூட்டத்தைக் கொண்டிருந்தோம். மேலும், அவள், அங்கே விடுதலை அடைந்தவளாய், கிறிஸ்துவிடம் திரும்பவும் கொண்டு வரப்பட்டாள். இது ஒரு யூபிலி நண்பர்களே, யூபிலி தொடர்கிறது. ஸ்திரிகளும், புருஷர்களும், கிறிஸ்துவிடம் திரும்பி வருகிற நேரம் இதுவே. 25. சில நாட்களுக்கு முன்பு, சுவிட்சர்லாந்தில், அங்கிருக்கிற பெரிய உயரமான, ஆல்ப்ஸ் மலையின் மேல் நின்று கொண்டு, அர்னால்ட் வான் வின்கலரய்-டைக் குறித்து, சிந்தித்துக் கொண்டு இருந்தேன். உங்களில் அநேகருக்கு, அந்த கதை தெரியும். அநேக வருடங்களுக்கு முன்பு, சுவிட்சர்லாந்தில் அவன், எப்படியாய், ஒரு தீரமுள்ள வீரனாய் இருந்தான். மேலும் எப்படியாய் ஒரு பெரிய ராணுவம், அந்த சுவிஸ் தேசத்திற்குள் படையெடுத்து, பட்டணங்களை பிடித்துக் கொண்டன. மற்றும், அந்த சுவிஸ் மக்களின் தீரமுள்ள இரத்தமானது, அவர்கள், தங்களை பாதுகாத்துக் கொள்ளும்படியாக வைத்திருந்த, தற்காப்புக்கான சிறிய ஆயுதங்களுடன், மலையிலிருந்து, பள்ளத்தாக்கு மட்டுமாக, கூடி வரும்படி செய்தது. மேலும், அவர்கள் களத்தில் நின்றபோது, பகைவர்கள் நெருங்கி வருவதையும், அவர்கள் அந்த பெரிய ராணுவத்தை நெருங்கிபோன போது, அவர்களில் ஒருவன், ஐம்பது பேருக்கு சமானமாய் இருப்பதையும், கவனித்தார்கள். மேலும் அவர்கள், அவர்கள் ராணுவ வீரர்கள் அல்ல; அவர்கள் பயிற்றுவிக்கப்பட்டவர்களும் அல்ல, அவர்களுக்கு என்னசெய்வது என்றே அறியாதவர்களாய் இருந்தார்கள். ஆனால், அங்கே படையெடுத்த அந்த ராணுவமானது, நல்ல பயிற்சி பெற்றதாய் இருந்தது. ஒவ்வொரு மனிதனும் ஒரு செங்கல் சுவரைப்போல, சரியாக உள்ளே வந்தார்கள். 26. மேலும், அவர்கள் அங்கே தங்கள் ஈட்டிகளை மேலே உயர்த்தினவர்களாய் நின்றிருந்தபோது, ஒரு மகத்தான மனிதன், அடியெடுத்து வெளியே வந்தான். அவன் தான், அர்னால்டு வோன் விங்க்கல்ரைடு. அவன் அடியெடுத்து அவர்கள் மத்தியில் வந்தபோது, அவர்கள், எல்லாவற்றையும் இழந்தோம் என்று எண்ணி, நம்பிக்கையற்றவர்களாய் காணப்பட்டார்கள். அவர்கள் எளிதில் தோற்று, தங்கள் வீடுகளை இழந்து, குடும்பத்தார் கொல்லப்பட்டு, அவர்களுடைய பிதாக்களுடைய நிலங்கள் அழிக்கப்பட்டிருக்கும். அங்கே அவர்கள் செய்யக் கூடியது ஒன்றுமில்லாதிருந்தது. அது நம்பிக்கை அற்ற நிலையாய் இருந்தது. அப்போது, அர்னால்டு வோன் விங்க்கல்ரைடு வெளியே அடியெடுத்து வைத்து, "சுவிஸ் சகோதரார்களே, என் ஜீவனை சுவிட்சர்லாந்துக்காகவும், என் சொந்த மண்ணுக்காகவும், இந்த நாளிலே கொடுக்கப் போகிறேன்" என்றான். அவன், "நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்" என்று கேட்டான். அவன், "இதோ, கீழே தொலைவில் இருக்கிற பள்ளத்தாக்கிலே, ஒரு அன்பான சிறிய குடும்பத்திலே, என் மனைவியும், என் சிறு பிள்ளைகளும், நான் திரும்பி வரும்படி காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இனி ஒரு போதும், என்னை மறுபடியும் காணப் போவதில்லை. இந்த நாளில், என் ஜீவனை என் தேசத்துக்காக கொடுக்க போகிறேன்", என்று கூறினான். அவன், அவ்விதமாக கூறினபோது, "அவர்கள் நீ என்ன செய்யப் போகிறாய்?" என்று கேட்டார்கள். மேலும் அவன், "இப்போது, ஆயுதங்களை கொண்டிருக்கிற நீங்கள் ஒவ்வொருவரும், என்னை பின் தொடர்ந்து, உங்களால் முடிந்த சிறந்த ஒன்றை செய்யுங்கள். உங்களிடத்தில் உள்ளதை கொண்டு சண்டையிட்டு, உங்களால் செய்ய முடிந்த எல்லாவற்றையும் செய்யுங்கள்" என்று கூறினான். 27. மேலும் அவன், அவனுடைய ஆயுதத்தை தூக்கி எறிந்து, "விடுதலைக்கு வழியை உண்டாக்குங்கள்" என்று உரத்த சத்தமிட்டவனாய் அநேக ஈட்டிகள் பாய்ந்து வரும் பாதையில், அந்த ராணுவத்தை நோக்கி ஓடத் தொடங்கினான். அவன் அங்கே பளபளக்கும் நூற்றுக்கணக்கான ஈட்டிகள், அவன் வரும்போது அவனுக்குள் பாய்கிற இடத்திற்கு, சரியாக சென்றான். அவன் தன் கரங்களை உயர்த்தி, ''விடுதலைக்கு வழியை உண்டாக்குங்கள்", என்று கத்தினான். மேலும் அவன், தன்னை நோக்கி பாய்ந்து வந்த அந்த ஈட்டிகளையெல்லாம், தன் கரங்களால் பற்றி இழுத்து, தன் மார்பில் பாய்ச்சிக் கொண்டான். அவனுக்கு பின் அந்த ஒவ்வொரு சுவிஸ் போர் வீரர்களும், அவனை பின் தொடர்ந்து வந்தார்கள். பகைவர்களுடைய அணிவரிசையை உடைத்து போட்டான். இதற்கு முன் ஒரு போதும், பெற்றிராத வெற்றியை, அன்று அவர்கள் பெற்றார்கள். இன்று, சுவிட்சர்லாந்தில் அவனுடைய பெயரை குறிப்பிட்டால், அவர்கள் கண்கள் முழுவதும், கண்ணீரினால் நிறம் மாறும். தங்கள் கதாநாயகனுக்காக, அவர்களுடைய கன்னங்கள் பூரிப்பினால் ஜொலிக்கும். என்னுடைய கருத்தின்படி, ராணுவ வரலாற்றிலேயே, அவன் மகத்தான வீரர்களில் ஒருவனாக இருந்தான். ஆனால் அது வெறுமனே சிறிய காரியம். அது ஒரு சொற்ப காரியம். ஒரு நாளில் ஆதாமின் குமாரர்கள் தோல்வி அடைந்தவர்களாய், நின்று கொண்டிருந்தார்கள். நியாயபிரமானம், தீர்க்கதரிசிகள், மற்றும் யாவும், தோல்வி அடைந்திருந்தன. நாம் செய்த அணுகுமுறை ஒவ்வொன்றும், முற்றிலுமாக தோல்வி அடைந்திருந்தன. மேலும் எங்கோ தொலைவில் இருந்த, மகிமையில் இருந்து, தேவ குமாரன் எனப்பட்ட ஒருவர் காலடி வைத்து வெளியே வந்தபோது, தூதர்கள், "நீர் என்ன செய்ய போகிறீர்", என்று கேட்டார்கள். அவர், நான் கீழே சென்று, "என் ஜீவனை கொடுக்கப் போகிறேன், என்றும், இந்த நாளில் விழுந்து போன ஆதாமின் குமாரர்களை மீட்கப் போகிறேன்", என்றும், சொன்னார். 28. மேலும், அவர், கல்வாரிக்கு வந்தார். அவர் அடர்த்தியான ஈட்டிகளின் ஊடாக சென்றார். அவர் மரண நிழலின் பள்ளத்தாக்கின் ஊடாக சென்று, பிசாசின் ஒவ்வொரு அம்புகளையும் பிடித்து, தன்னுடைய சொந்த மார்பினுள் பாய்ச்சிக் கொண்டார். சபையை நோக்கி, நீங்கள் பெற்றிருப்பதைக் கொண்டு, உங்களால் முடிந்த சிறந்ததை செய்யுங்கள், என்றார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம், பெந்தெகொஸ்தே நாளில் பலத்த காற்று முழக்கத்துடன், பரத்திலிருந்து விழுந்து, ஒவ்வொரு மனிதனுக்கும் ஆயுதத்தை தரிப்பித்தது. மேலும், என் சகோதரர்களே! நான் இன்று உங்களுக்கு சொல்லுகிறேன். ஒவ்வொரு மனிதனும், நீங்கள் எதையெல்லாம் பெற்றிருக்கிறீர்களோ, அவற்றைக் கொண்டு, மிக சிறந்ததை செய்வோமாக! கடைசி நபர் மட்டும் சண்டையிடுவோமாக! ஏனென்றால் உடைந்து போயிருக்கிற சத்துருவின் வரிசையை நாம் கொண்டிருக்கிறோம். கிறிஸ்து, சாத்தானை தோற்கடித்தார். அவன் அதுவரை பெற்றிருந்த எல்லாவற்றையும், அவனிடமிருந்து உரிந்து போட்டார். மேலும், இன்று அவன், ஒன்றுமில்லாதவன், ஆனால் அவன் ஒரு பொய்யனாய் இருக்கிறான். அவன், உங்களிடம் நமக்கு வேறோரு பண்டைய கால பிரிசுத்த ஆவியின், வெளியரங்கமான ஊற்றப்படுதல் இருக்கமுடியாது என்று சொல்லும்போது, நாம் அதை இன்றே பெற்றுக் கொள்ளமுடியும். ஏனெனில், எதிரியின் வரிசை உடைந்து போனதாய் இருக்கிறது. தேவன் தாமே, இன்று ஆளுகை செய்பவராகவும், ஆட்சி புரிபவராகவும் இருக்கிறார். அல்லேலூயா! நான் அந்த ஜீவனுள்ள தேவனுடைய ஒரு பண்டையகால, பரிசுத்த ஆவியின் அனுபவத்திற்காக, மிகவும் மகிழ்ச்சியுடையவனாக இருக்கிறேன். 29. எப்படியாக, இந்த மகத்தான யுத்த புருஷராகிய, கிறிஸ்து, அவர் அந்த பாதையை உடைத்து, சத்துருவை நிலைகுலைந்து ஒடச் செய்தார்! பெந்தெகொஸ்தே நாளில் இருந்த அந்த சகோதரர்கள், அந்த ஐம்பதாவது எண்... ஐம்பதை குறித்து ஏதோ ஒரு காரியம் இருக்கிறது. அது யூபிலியை கொண்டு வருகிறது. அங்கே அவர்கள் எதிரியின் வரிசைகளை உடைத்தெறிந்து, இன்று நீங்களும், நானும், மறுபடியும் பண்டையகால பெந்தெகொஸ்தேயின் எழுப்புதலை பெறமுடியும், என்று நமக்கெல்லாம் ஒரு வெட்ட வெளியான, முன் உதாரணத்தை வைத்துப் போனார்கள். சகோதர, சகோதரிகளே! காலம் தாமதமாகி கொண்டிருக்கிறது; நீங்கள் நினைப்பதை காட்டிலும், காலதாமதமாகி உள்ளது. ஒரு விசை! சரியாக யுத்தத்திற்கு பிறகு, நாங்கள் பின்லாந்தில் இருந்தபோது, சகோ. மூர் அவர்கள் சொன்னபடியாக, அங்கே அவர்கள் இரவு பகலாக, வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஸ்திரீகள் வயல் வெளியில் நிலத்தை உழும் கருவிகளோடு, நிலத்தை உழுது பண்படுத்த நேரம் எடுக்க முடியாமல், அவர்கள் வெறுமனே நிலத்தை கீறி கிளரும், கருவியை இழுத்து கொண்டு போக வேண்டியதாய் இருந்தது. குளிர்காலம் வந்து கொண்டிருந்தது. மேலும்... சிறு பிள்ளைகள், இரவும் பகலுமாய், வேலை செய்தார்கள். அவர்கள் இரவு நேரத்தில் நிலத்தை உழுது கொண்டிருக்கிற, தன் தாய் தகப்பனாருக்கு, முன்பாக வெளிச்சத்தை உண்டு பண்ணும்படியாக கண்ணாடி கூட்டு விளக்குகளை (Lantern) தங்கள் கையில், ஏந்தினவர்களாய் சென்றார்கள். அவர்கள் விதையை விதைக்க செய்யக் கூடிய சிறந்த காரியம், அந்த நிலத்தை கீறி விடுவதே ஆகும். அவர்கள் விதையை விதைக்கவில்லையெனில், பனியானது வரப் போகிறது, குளிர் அவர்களை பிடித்துக் கொள்ளும். அவர்கள் யாவரும் அடுத்த வருடத்தில், பட்டினியாய் அழிந்து போக வேண்டியதாயிருக்கும். எனவே, அவர்கள் நிலத்தில் விதையை விதைத்தே ஆக வேண்டியதாய் இருந்தது. 30. என்னுடைய சகோதர, சகோதரியே, நாம் துரிதமாய் கீறி, தேவனுடைய வித்தை நிலத்திற்குள் விதைக்காவிட்டால் அறுவடை எப்படி இருக்கப் போகிறது. நாம் மறுபடியுமாக, வேறொரு பண்டைய கால பரிசுத்த ஆவியின் வெளியரங்கமான ஊற்றப்படுதலுடன், நாம் முன்னேறி செல்ல வேண்டும். புருஷர்களும், ஸ்திரீகளும், மறுபடியும் தேவனிடத்தில் திரும்ப வேண்டும். நாம் மட்டும் வித்துக்கும், தேவனுடைய வார்த்தைக்கும், மறுபடியும் ஒரு பண்டைய கால எழுப்புதலுக்கும் திரும்பவில்லையெனில், இந்த தேசமும், இந்த சபையும், பெந்தெகொஸ்தே ஸ்தாபனம் மற்றும் யாவும், இழக்கப்பட்டு போகும். இன்று, அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? தேவன் அதை வெளியரங்கமாய் ஊற்றுவார், என்று நீங்கள் நம்புகிறீர்களா? ஓ, என்னே! இன்று நான் இந்த மக்களோடு, இவ்விதமாக இடைபடும்படி, என் ஆத்துமாவில் உந்தப்பட்டதாக உணர்கிறேன். நான் விசுவாசிக்கிறேன். இன்று இந்த கட்டிடத்தில் உள்ள ஒவ்வொருவரும், தங்களுடைய ஜீவியத்தை தேவனுக்கென்று, மறு பிரதிஷ்டை செய்தால், செய்யும் பட்சத்தில்... கர்த்தர், யாக்கோபுக்கு சொன்ன விதமாக, அவனையும், அவனுடைய ஜனங்களையும், கர்த்தருக்கு முன்பாக, அர்ப்பணிக்கிற அளவுக்கு பரிசுத்தம் செய்தது போல, இன்று இந்த கட்டிடத்தில் உள்ள ஒவ்வொருவரும், தங்களுடைய ஜீவியத்தை தேவனுக்கென்று மறுபிரதிஷ்டை செய்தால், செய்யும் பட்சத்தில்... நான் விசுவாசிக்கிறேன், நாம் நம்மை எல்லா பொல்லாத சிந்தனைகளிலிருந்தும், நம்முடைய சுயநலத்திலிருந்தும், நம்முடைய எல்லா புறங்கூறுதலிலிருந்தும், இந்த ஜீவியத்திற்கடுத்த எல்லா நடக்கைகளிலிருந்தும், நம்மை நாமே சுத்திகரித்துக் கொண்டு, தைரியமாக, தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக வரும் பட்சத்தில், நான் விசுவாசிக்கிறேன், ஒரு பண்டைய கால எழுப்புதல் சரியாக இங்கே தூதருடைய ஆலயத்திலே, சடிதியில் எழும்பி, அது ஒரு வாரம் சென்றாலும், முடிவில்லாமல் தொடர்ந்து போகும், அது சரியே, அது தொடர்ந்து போய்க் கொண்டே இருக்கும், அதை நீங்கள் நம்புகிறீர்களா? 31. ஒரு கணப்பொழுது, நாம் நம்முடைய கால்களில் எழும்பி நிற்போமாக. இந்த விதமான இடத்தில் ஒருபோதும் நீங்கள், ஒரு பீட அழைப்பை விடுக்க முடியாது. அதற்கு போதுமான இடம் இங்கில்லை. ஆனால், உங்கள் இருதயமே அந்த பலிபீடமாயிருக்கிறது. உங்கள் இருதயத்தில் தான் தேவன் ஜீவிக்கிறார். ஒருபோதும் பரிசுத்த ஆவியை பெறாத மக்கள், இங்கு நின்று கொண்டிருக்க கூடுமோ என்று, இன்று நான் வியக்கிறேன். நீங்கள் இங்கு நடக்கிற மகத்தான காரியங்கள் யாவற்றையும் கேட்டிருந்தும், இன்னுமாக நீங்கள் ஒருபோதும், அதை பெற்றிருக்கவில்லையெனில், உங்கள் கரத்தை தேவனுக்கு நேராக உயர்த்தி, "நான் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறேன் என்று சொல்வீர்களா?" உங்கள் கரங்களை உயர்த்துவீர்களா, சுற்றிலும் உள்ளவர்கள், மேலே உள்ள பால்கனியில், எல்லா இடங்களிலும், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக! இங்கே, கிறிஸ்துவை தங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளாதவர்கள் எத்தனை பேர்? உங்கள் கரங்களை உயர்த்துவீர்களா? நீங்கள் உங்கள் நித்திய சேருமிடத்தைக் குறித்து, தேவனுக்கு உங்கள் கரங்களை உயர்த்த, நீங்கள் போதுமான அளவு அக்கரை உடையவர்களாய் இருக்கிறீர்களா? நீங்கள் அதை செய்வீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக! 32. இங்கே, எத்தனை பேர் ஏற்கனவே பரிசுத்த ஆவியை பெற்றிருந்து, இன்று கிறிஸ்துவுக்கு புதிதாக தங்களுடைய ஜீவியத்தை பிரதிஷ்டை செய்ய விரும்புகிறீர்கள், உங்கள் கரங்களை உயர்த்துங்கள். தேவனாகிய கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக! நான் விசுவாசிக்கிறேன், கர்த்தருடைய அனுக்கிரக வருஷம் பிரசங்கிக்கப்பட்ட பின், அவர்கள் பெந்தெகொஸ்தே நாளில் தேவாலயத்தில், கூடி வந்திருந்தார்கள். அவர்கள் விசுவாசிகளாயிருந்தார்கள். அவர்கள் ஒரு மனப்பட்டு ஓரிடத்தில் கூடி வந்திருந்தார்கள். இன்னும் ஒருவிசை இந்த தேவாலயத்தில், தேசத்தின் எல்லா பாகங்களிலிருந்தும் வந்த விசுவாசிகள், கூடி இருக்கும் இந்த கூட்டமானது, இந்த மதிய வேளையில் எவ்வளவு பொருத்தமாயுள்ளது. யாவரும் ஒருமனப்பட்டு ஓரிடத்தில் வந்திருக்கிறார்கள். சற்று நேரத்துக்கு முன்பாக கொடுக்கப்பட்ட செய்தியை கேட்டு, மதிய வேளையில் பரிசுத்த ஆவியானவர் வெளியரங்கமாய், நம் மத்தியில் ஊற்றப்படுவதற்கு, என்னே! ஒரு அருமையான நேரமிது. தேவன் உனக்கு அந்நிய பாஷையில் பேசும் செய்தியை கொடுத்திருந்தால், அதை செய்! தேவன் உனக்கு, வியாக்கியானம் செய்வதை உன் கரத்தில் கொடுத்திருந்தால் அதை செய்! தேவன் உனக்கு, சாட்சி கொடுப்பதை உன் கரத்தில் கொடுத்திருந்தால் அதை செய்! தேவன் உனக்கு பிரசங்கம் செய்வதை உன் கரத்தில் கொடுத்திருந்தால், பிரசங்கி! நீங்கள் எதை பெற்றிருக்கிறீர்களோ, அதோடு போங்கள்!, கிறிஸ்து வரிசைகளை உடைத்ததால், நாம் கடந்து சென்று, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கென்று ஜெயத்தை பெறுவோமாக! இப்பொழுது நாம் கரங்களை தேவனுக்கு நேராக உயர்த்தி, தேவனுக்கு நன்றி சொல்லி, அவரை துதிப்போமாக! 33. எங்கள் பரலோக பிதாவே, பரிசுத்தாவியின் வெளியரங்கமான ஊற்றப்படுதலுக்காக, இன்று நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். கர்த்தாவே ஒரு மகத்தான கூட்டத்திற்காகவும், மக்கள் மத்தியில் ஒரு பெரிய அசைவிற்காகவும், நாங்கள் உம்மை விசுவாசிக்கிறோம். இந்த ஆசீர்வாதங்களை, அனுக்கிரகம் பண்ணும்படியாக, இன்று உம்மிடம் கேட்கிறேன், தேவனே ஒரு மகத்தான ஐக்கியத்தின் நேரத்தை, அவர்கள் பார்ப்பார்களாக... இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். தேவனே உம்முடைய ஜனங்களை கேட்டருளும்... வானொலியின் வாயிலாக கேட்கிறதான மக்களாகிய நீங்கள், இங்கே இருக்கிற, ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டதான மக்கள் தங்கள் கரங்களை உயர்த்தி, கர்த்தராகிய இயேசுவை துதிப்பதை பார்க்க வேண்டுமெனில், நீங்கள் இங்கே இருக்க வேண்டும். நாங்கள் பண்டைய கால யூபிலி கொண்டாட்டத்தை கொண்டு இருக்கிறோம். வெளியே வந்து எங்களோடு இணைந்து கொள்ளுங்கள், ஒவ்வொருவரும் கர்த்தரை துதித்து, மறுபடியும் பண்டைய கால மார்க்கத்திற்காக தேவனுக்கு துதி செலுத்துகிறார்கள். நாம் ஜீவித்து கொண்டிருக்கிறது, இந்த நவீன உலகத்தில், புருஷர்கள் தாறுமாராக்கப்பட்டவர்களாயும், அவர்களுடைய சிந்தனைகள் பொல்லாதவைகளாயும், எவ்விடங்களிலும் பாலியல் குற்றங்கள் குவிந்திருந்த போதிலும், இன்னுமாய் இவைகள் எல்லாவற்றின் மத்தியிலும், தேவன் அவருடைய பரிசுத்த ஆவியை பகலுக்கு பகலாக, இரவுக்கு இரவாக வெளியரங்கமாக ஊற்றி, சரியாக, இங்கு இந்த மதியான வேளையில், தூதருடைய ஆலயத்திலும், பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கிறார். தேவன் அவருடைய மக்களை ஆசீர்வதிக்க, எவ்வளவாய் இங்கே இருக்கிறார். 34. மேலும், வானொலி வாயிலாக கேட்கிற நீங்கள்... (இன்னுமாக நான் பேசி கொண்டிருக்கிறது ரேடியோவில் போய் கொண்டிருக்கிறதா என்பதை நான் அறியவில்லை). ஆனால், வானொலி வாயிலாக கேட்கிற நீங்கள், தேவனுடைய மக்களின் மகத்தான கூடுகை எப்படியாக இருக்கிறது என்பதையும், எப்படியாக ஆவியின் ஒருமைப்பாடு இங்கே இருக்கிறது என்பதையும், இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறதென்பதையும், நீங்கள் இங்கு வந்து பார்க்க வேண்டும். இங்கே வெவ்வேறான ஸ்தாபனங்களின் தடைகள் உடைக்கப்பட்டு, போயின. ஒவ்வொருவரும் ஏக இருதயத்தோடும், ஏக மனதோடும் நின்று, கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். என்னே! ஒரு அற்புதமான நேரம். ஓ! நாம் நம்முடைய இருதயங்களை திறந்துக் கொடுப்போமாக; நம்முடைய சத்தத்தையும், நம்முடைய கரங்களையும், நம்முடைய இருதயத்தையும், கிறிஸ்துவுக்கு நேராக உயர்த்தி, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தையும், ஒரு வெளியரங்கமான ஊற்றப்படுதலையும், பெற்றுக் கொள்வோமாக! நீங்கள் அதை பெற்றுக் கொள்ளும்படி தீர்மானித்தவர்களாய், இருந்தால், உண்மையாகவே அது உங்கள் விருப்பமாயிருந்தால்... ஆனால் நீங்கள் அதை பெற்றுக் கொள்வதற்கு முன்பு, அதை குறித்த பசி தாகம் உடையவர்களாய் இருக்க வேண்டும். வேதம் சொல்லுகிறது, ''நீதியின் மேல் பசிதாகம் உள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் திருப்த்தியடைவார்கள்". 35. (வானொலி, (K.S.F.G) வானொலி அறிவிப்பானது அதன் அறிவிப்பாளரால் அறிவிக்கப்படுகிறது - ஆசிரியர்). உம்முடைய தேசம். பரலோகப் பிதாவே, நாங்கள் இங்கு காற்றை விடும்போது, பரிசுத்த ஆவியானவர் தாமே பற்றிப் பிடித்து எறிந்து, இந்த பட்டணத்திலேயும், சுற்றிலுமிருக்கிற தேசத்திலேயும், தேவ வல்லமையானது, கூட்டங்களிலே விழுகிறதான, பண்டையகால எழுப்பதலை திரும்ப கொண்டு வருவாராக! எங்குமிருக்கிற சுகவீனர்களையும், பாதிக்கப்பட்டவர்களையும் சுகப்படுத்துவீராக, கர்த்தாவே, இந்த ஆராதனை மூலம் மகிமையை அடைவீராக. இயேசுவின் நாமத்தின் மூலம்... ஆமென்! 2